Wednesday, December 22, 2010

நொடிப் பொழுது

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள‌
ஓராயிரம் காலம் வேண்டும்‍ அது
ஒரு நொடிப்பொழுதில் அழிந்து போக
ஒரு சொல் செயல் போதும்.

Monday, August 30, 2010





உள்ளழகு(உள்ள அழகு)

அழகிய புருவம்
அடர்த்தியான கூந்தல்
வெண்மை நிறம்
கட்டழகு என‌
வெளியழகு தேடும் மானுடரே
உள்ளழகு(உள்ளம்+அழகு) இல்லாவிடில்
உள்ள அழகும் பூச்சியமே




நமது மனம், சொல் சுத்தமாக இல்லாவிடில் இறைவனை வணங்கியும் பயன் கிடைக்காது. பெற்றவர் மனம் நோகாமல் ,அடுத்தவர் பற்றி புறம் கூறாமல் வாழ்பவர்களுக்கு என்றுமே இறைவனின் அருள் கிடைக்கும்.
உள்ளத்து அழகு இல்லாவிடில் உள்ள அழகும் , நம்மிடம் இருக்கின்ற அழகும் பூச்சியம் தான்.

Tuesday, August 11, 2009

வ‌ண‌க்க‌ங்க‌ள் ந‌ல் ந‌ண்ப‌ர்க‌ளே

நீண்ட நாட்களின் பின் மீண்டும் வலைப்பதிவுக்குள் நுழைய வந்திருக்கிறேன் .வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களோடு நானும் ஒருத்தியாய்.





வ‌லைப்ப‌குதிக்குள் வ‌ந்துவிட்டேன் என் - நல்
க‌லைத‌னை பெருக்கிட‌வே


க‌ளமாக‌ நினைக்கிறேன் என்-அறிவினை
வ‌ள‌மாக்க‌ நினைக்கிறேன்

த‌மிழ் மொழியாம் என் -உயிர் மொழிக்குள்
அமிழ்ந்து எழ‌ப்போகிறேன்

வ‌ண‌க்க‌ங்க‌ள் ந‌ல் ந‌ண்ப‌ர்க‌ளே என் - வ‌லைப்ப‌திவு
வளர்வதற்கு நல் பின்னூட்ட‌ம் இடுவீர‌ன்றோ

Tuesday, March 25, 2008

அம்மா





அழகான கவிதை நீ -உன்னை
ஆராதிக்க ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் போதாது

உன் கைப்பிடித்து " அ " நான் எழுத
கன்னத்தில் தந்திடுவாய் "இச்" ஒன்று

உன்மடி மீது சாய்ந்து துயில் கொள்ளும்போது
என் தலைகோதி உலகம்தனை மறக்க வைப்பாய்

அரைகுறையாய் வயிறு நிறைத்து பள்ளி செல்லும்காலைப்பொழுதுகளில்
அங்கும் இங்குமாய் என்னோடு நீ நடந்து ஊட்டிடுவாய்

உயர்கல்விக்காய் ஊர் விட்டு நான் போக
உன் அன்புத்தொலைபேசிகள் " மகள் சாப்பிட்டாயா" என

உன்வலிகள் மறந்து
எமக்காய் வாழும் தெய்வம் நீயன்றோ

எல்லா ஜென்மமும் நீயே என்
தொப்புள் கொடி உறவாய் வேண்டும் தாயே

Tuesday, March 11, 2008

திருக்கோணேச்சரமும் ( திருக்கோணேஸ்வரமும்) சிவராத்திரியும்


இணையத்திலிருந்து பெறப்பட்ட படம்
நிரைகழல் அரவஞ் சிலம்பொலியலம்பும் நிமலர் நீறணி திருமேனி
வரைகெழுமகளோர் பாகமாப்புனர்ந்த வடிவினர் கொடியணிவிடையர்
கரைகெழு சந்துங் காரகிற்பிளவும் அளப்பருங்கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங்கொழிக்கும் கோணமாமலையமர்ந்தாரே

என திருஞான சம்பந்தப்பெருமானால் பாடப்பெற்ற ஈழத்துச் சிவத்தலங்களில் பிரசித்தி வாய்ந்த கோணேச்சரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

06.03.2008 அன்று ஐந்து வருடங்களுக்கு பிறகு சிவராத்திரி தினத்தன்று போவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.இதற்கு முன் மூன்றாம் வருட விடுமுறையின் போது 2005 வருடம் நண்பிகள் என்னுடன் கொழும்பில் இருந்து வந்தபோது சென்றிருந்தேன்.அப்போது சென்றதற்கும் இந்த வருடம் சென்றதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இராணுவரீதியான கெடிபிடிகள் சற்று அதிகமாக இருந்ததை உணர முடிந்தது.

வாகனங்கள் கோட்டை முன்வாயிலில் நிறுத்தப்படவேண்டியிருந்தது. கலைநிகழ்ச்சிக்கு பங்குகொள்பவர்களின் வாகனங்கள் மாத்திரமே உட்செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.பெண்களுக்கும் , ஆண்களுக்கும் தனித்தனியாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சோதனைகள் ,வேதனைகள் தீர்க்க உன்பாதம் தொழுவதற்கு வருமுன்னே சோதனைச்சாவடிகளில் எம்மை சாவடிக்கிறார்களே கோண நாதா என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

கமரா வசதி இருக்கும் தொலைபேசிகள் உள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.பாதுகாப்பு பிரிவினரிடம் தொலைபேசிகள் ஒப்படைக்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் சென்ற வாகனத்தில் உள்ளே வைத்துவிட்டு வந்து விட்டோம்.எனவே புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நுழைவாயிலிருந்து நடந்து செல்ல வேண்டும் என நினைத்தபோது இராணுவத்தினரால் தனியார் வாகனம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு 10 ரூபாய் அறவிடப்பட்டிருந்தது.பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களின் வாகனம் அது. அன்று அவர்களுக்கு நல்ல வருமானமாக இருந்து இருக்கும். நடந்து செல்ல ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.வழக்கமாக கோட்டையின் முன்வாயிலில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டே செல்வது வழக்கம். அதற்கு முன் உள்ள தூரத்திலே நாங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டதால் வழிப்பிள்ளையாரை வாகனக்கண்ணாடி ஊடாகவே வணங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இலங்கை இராணுவத்தால் தாகசாந்திக்காக பானங்களும், சிற்றுணவுகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.வாருங்கள் பானம் அருந்துங்கள் என சிங்கள இராணுவ பெண் சிப்பாய் எங்களை அழைத்துக்கொண்டார்.இவற்றை எல்லாம் இராணுவ அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்துகொண்டிருந்தை அவதானிக்க கூடியதாக இருந்தது.மக்களுடன் நண்பர்களாய் இருக்கிறோம் என வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம்.

கோவிலை நாங்கள் இரவு 8.30 போல் அடைந்து இருப்போம். வழமையாக சிவராத்திரி தினத்திற்கு வருவர்களை விட இந்த முறை சற்றுக்குறைவாகவே இருந்ததாக சொன்னார்கள். நேத்ரா அலைவரிசையினர் திருகோணமலை பாடசாலை மாணவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட நடன நிகழ்ச்சிகளை நேரடியாக இலங்கைபூராகவும் காண செய்திருந்தார்கள்.
வீடு திரும்புகின்ற போது எப்போ இந்நிலை மாறும் நினைத்த பொழுதினில் உனை பயமின்றி காணவர எந்தனிற்கு வழிவிடுவாய் கோண நாதா என நினைத்துக்கொண்டேன்.




Friday, February 15, 2008

ஆட்டோகிராப்




வாழ்த்துக்கள்
வழியனுப்பல்கள்
சிணுங்கல்கள்
கட்டியணைப்புகளுடன்
முடிந்துபோன
கல்லூரிவாழ்க்கையை
மீண்டும் நினைவுபடுத்தியது
நண்பிகள் எழுதிய
ஆட்டோகிராப் வாசகங்கள்

Saturday, January 26, 2008

சொல்லம்(ன்) பு

நீ பேசும் வார்த்தைகளில் அன்பு கூட வேண்டாம்
சொல்லம்புகளால் வதைக்காதே மற்றவரை - ஏனெனில்
மீண்டும் அவை உனக்கே மற்றவர்களால்
உன் மீதும் பாய்ந்துகொள்ளும்.




எத்தனை விதமான மனிதர்கள் இந்த உலகத்தில். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே நோட்டமிட்டு அதில் குற்றம் கண்டுபிடித்து நையாண்டி பண்ணாவிட்டால் சிலருக்கு நித்திரையே வராது.சொற்களால் இன்னொருவரின் மனதை காயப்படுத்தல் ..சாதரணமாக வார்த்தகளை அள்ளி கொட்டி விடுவோம்.அது மற்றவருக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல்... நானும் சில வேளைகளில் கோபத்தை அடக்கமுடியாமல் பேசியதுண்டு .அப்போதெல்லாம் மனம் வருந்தியிருக்கிறேன் .கடவுளே ஏன் அப்படி கதைத்தேன் என்று.யோசிக்காமல் எவற்றையும் கதைக்க கூடாது.வள்ளுவர் கூட மிக அழகாக தன் குறளிலே சொல்லி இருக்கிறார்.

தீயினால் சுட்ட புண் ஊள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
The wounds of fire would vanish with time but the wounds caused by words never..!

எல்லோரும் போகப்போவது ஆறடி மண்ணிற்குள் தான். அன்பாக பேசாவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் பேசுங்கள் .. 2008 பிறந்து முதல் மாதமும் முடியப்போகின்றது. இனியாவது திருந்துவம்..